ராசிபுரத்தில் தொழிலதிபர், ஓட்டல் காசாளர் வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு


ராசிபுரத்தில் தொழிலதிபர், ஓட்டல் காசாளர் வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு
x
தினத்தந்தி 22 July 2017 3:44 AM IST (Updated: 22 July 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் தொழிலதிபர், ஓட்டல் காசாளர் வீட்டில் அடுத்தடுத்து திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ராசிபுரம்,

ராசிபுரம் நகராட்சி 25–வது வார்டுக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலையில் உள்ள கார்ப்பரேசன் வங்கி தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் கமலக்கண்ணன்(வயது40). இவர் கருவாடு அரைக்கும் மில் நடத்தி வருகிறார். கடந்த 19–ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அவரது மில்லுக்கு சென்றுவிட்டார். இரவு நேரம் ஆகிவிட்டதால் அங்கேயே தங்கிவிட்டனர். இந்தநிலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம், ரூ.45 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், கேமரா, கார் சாவி மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது.

கமலக்கண்ணன் வீட்டிற்கு எதிரே வசிப்பவர் சேகர் (55). இவர் ராசிபுரத்தில் உள்ள ஓட்டலில் காசாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த 19–ந் தேதி சேகர் அவரது உறவினர் ஒருவர் காலமானது தொடர்பாக துக்கம் விசாரிக்க குடும்பத்துடன் மைசூரு சென்றுவிட்டார். இந்த நிலையில் மர்ம நபர்கள் யாரோ அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தோடு, செயின், பிரேஸ்லெட் உள்பட 4 ½ பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இதனிடையே வெளியூரில் இருந்து நேற்று காலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சேகர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அடுத்தடுத்து நடந்த இந்த திருட்டுகள் குறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இரண்டு வீடுகளிலும் ஒரே நாளில் திருட்டு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story