ஓராண்டிற்கு மேல் வேலைபார்த்தவர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓராண்டிற்கு மேல் வேலைபார்த்தவர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2017 11:00 PM GMT (Updated: 2017-07-26T02:49:18+05:30)

108 சேவையில் ஓராண்டிற்கு மேல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நல சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட கிளையை சேர்ந்தவர்கள் நேற்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் வரவேற்றார்.

மாநில தலைவர் இருளாண்டி, பொது செயலாளர் உலகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 4 மாத காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வினை காலதாமதமின்றி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்த 108 வாகனடிரைவர்களுக்கு உரிய நிவாரண தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓராண்டிற்கு மேல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடங்களில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான அடிப்படை வசதியினை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 108 ஆம்புலன்ஸ் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story