100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2017 11:00 PM GMT (Updated: 25 July 2017 9:20 PM GMT)

அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் குமாரராஜா கலந்து கொண்டு பேசினார்.

அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட சம்பள பாக்கி முழுவதையும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி, விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் சோமசுந்தரம், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பக்கிரிசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுபா, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் கோசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கனக சுந்தரம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் தனவேந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வலங்கைமான் ஒன்றியத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கிட வேண்டும். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ராதா, பாலையா, கருப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story