கல்யாண் ஜெயில் சுவரை ஏறி குதித்த கைதிகள் மோட்டார் சைக்கிள், காரை பறித்து தப்பினர்


கல்யாண் ஜெயில் சுவரை ஏறி குதித்த கைதிகள் மோட்டார் சைக்கிள், காரை பறித்து தப்பினர்
x
தினத்தந்தி 25 July 2017 11:00 PM GMT (Updated: 25 July 2017 9:27 PM GMT)

கல்யாண் ஜெயிலில் சுவரை ஏறி குதித்த கைதிகள் மோட்டார் சைக்கிளையும், பன்வெலில் ஒருவரிடம் காரையும் பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

மும்பை,

தானே மாவட்டம் கல்யாண் ஆதர்வாடி ஜெயிலில் கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளையில் தொடர்புடைய டேவிட் முருகேசன்(வயது 20), மணிகண்டன் செல்வராஜ்(20) ஆகியோர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். கடந்த 23–ந் தேதி காலை 6.45 மணியளவில் ஜெயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் கைதிகள் டேவிட் முருகேசன், மணிகண்டன் செல்வராஜ் ஆகியோர் கண்காணிப்பு கேமரா வயரை பயன்படுத்தி சுற்றுச்சுவரை ஏறி குதித்து தப்பினர். இவர்கள் கோன் வில்லேஜ் பகுதியில் அந்த வழியாக வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை பறித்தனர்.

பின்னர் 2 பேரும் அந்த மோட்டார் சைக்கிளில் பன்வெல் சென்றனர். பன்வெல் அரசு பஸ் டெப்போ அருகில் உள்ள மேம்பால பகுதியில் இரவு 10 மணியளவில் அவர்கள் அந்த வழியாக வந்த ஒர்க்ஷாப் உரிமையாளர் ராஜூவின் காரை வழிமறித்தனர். அவர்கள் ராஜூவை வெளியே தள்ளிவிட்டு காரில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து ராஜூ பன்வெல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காருடன் தப்பிச்சென்ற கைதிகள் 2 பேரையும் தேடிவருகின்றனர். போலீசார் சம்பவ இடத்தில் இருந்து கைதிகள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை மீட்டனர்.


Next Story