ரூ.9½ கோடி செலவில் அமைக்கப்பட்ட தனுஷ்கோடி புதிய சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்


ரூ.9½ கோடி செலவில் அமைக்கப்பட்ட தனுஷ்கோடி புதிய சாலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 26 July 2017 10:15 PM GMT (Updated: 2017-07-26T23:37:20+05:30)

தனுஷ்கோடியில் ரூ.9½ கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய சாலையை அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.

ராமநாதபுரம்,

கடந்த 1964–ம் ஆண்டு ஏற்பட்ட கோர புயலால் அழிந்த தனுஷ்கோடியை புனரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்ஒரு கட்டமாக தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் தொடங்கப்பட்டது. இதன்படி முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வலை 5 கிலோ மீட்டர் தூரமும், தன்கோடி முதல் அரிச்சல் முனை வரை 4½ கிலோ மீட்டர் தூரமும் புதிய சாலை ரூ.9½ கோடி செலவில் அமைக்கப்பட்டது. இதன்பின்னர் கடல்அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் சாலை திறப்பு விழாவிற்காக காத்திருந்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி பேய்க்கரும்பு பகுதியில் அப்துல்கலாம் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை இன்று(வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த விழாவில், பிரதமர் தனுஷ்கோடி புதிய சாலையையும் திறந்து வைத்து பயணிகள் போக்குவரத்திற்காக அர்ப்பணிக்கிறார். இதற்கான நிகழ்ச்சியும் பிரதமரின் விழாவில் புதிதாக இணைக்கப்பட்டுஉள்ளது. இதுதவிர, மத்திய அரசு புண்ணியதலமான ராமேசுவரத்தின் முக்கியத்துவம் கருதி ராமேசுவரம் பகுதியை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்து அதற்கான வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற திட்டமிட்டுஉள்ளது. இதன்படி ராமபிரான் வந்து வழிபட்ட இடங்களான ராமேசுவரம், தேவிபட்டினம், உப்பூர், திருப்புல்லாணி போன்ற பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மேற்கண்ட திருத்தலங்களிலும், அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பக்தர்களின் வசதிக்காகவும், திருத்தலங்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு கட்டுமான பணிகள், சாலை வசதி, உப்புநீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின் சக்தி, உடைமாற்றும் அறை, பேட்டரி கார்,பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதுதவிர, மேற்கண்ட திருத்தலங்களை இணைக்கும் வகையில் மினி பஸ் வசதியும் செய்யப்பட உள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அடங்கிய ரூ.50 கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுஉள்ளது. இந்த திட்டத்தினை பிரதமர் நரேந்திரமோடி கலாமின் மணிமண்டப திறப்பு விழாவில் சிறப்பு திட்டமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story