விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2017 10:30 PM GMT (Updated: 26 July 2017 7:36 PM GMT)

குமராட்சி, குறிஞ்சிப்பாடியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில்,

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிலவும் முறைகேடுகளை அகற்றி முறையான கூலி வழங்க வேண்டும், ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பனை செல்வம், ஒன்றிய செயலாளர் மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் குமராட்சி பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 200 நாட்கள் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். சேகர், வள்ளி, சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தண்டபாணி சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர் வாசு, மாவட்ட துணை செயலாளர் அஞ்சலை, கமலகண்ணன், ராஜ், மணி, ஜெயராமன் உள்பட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story