திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்


திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்
x
தினத்தந்தி 27 July 2017 1:30 AM GMT (Updated: 2017-07-27T01:42:04+05:30)

திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தை நாளை(வெள்ளிக்கிழமை) முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் இருந்து மாதவரம், கொடுங்கையூர், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல திருவொற்றியூர் மாட்டுமந்தை ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும். இந்த ரெயில்வே வழித்தடத்தில் வடமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்கள் என 100–க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதனால் தினமும் 100 தடவைக்கும் மேல் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் இருபுறங்களிலும் எப்போதும் காத்துக்கிடக்கும் நிலையே ஏற்பட்டது. எனவே இங்கு மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மணலி பொது வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.

இதையடுத்து 2014–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா திருவொற்றியூர் மாட்டுமந்தை ரெயில் நிலைய பகுதியில் மேம்பாலம் கட்ட ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். 18 மாதத்தில் பணிகளை முடித்து பாலம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தண்டவாளம் இருக்கும் பகுதியில் ரெயில்வே காரிடர் அமைக்கும் பணியை ரெயில்வே உடன் இணைந்து செய்ய வேண்டி இருந்ததால் தாமதம் ஏற்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேம்பால பணிகள் முடிவடைந்து உள்ளன. எனவே மேம்பாலத்தை உடனே திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில் கட்டி முடித்து திறக்கப்படாத திருவொற்றியூர் பாலத்தை திறந்து வைக்கப்போவதாக தி.மு.க. மற்றும் பா.ம.க. சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்க உள்ளார். இதற்கான விழா திருவொற்றியூர் மாட்டுமந்தை பகுதியில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி மேம்பாலத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

திருவொற்றியூர் பகுதியில் பல பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எண்ணூர் விரைவு சாலை பணிகளுக்காக திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் வீடுகளை காலி செய்தவர்களுக்கு இன்னும் மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக போராட்டம் நடக்கிறது. சி.பி.சி.எல். குழாய் பதிக்கும் பணிகள் தொடர்பாகவும் போராட்டம் நடந்து வருகிறது. ரெயில்வே பாதை விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை காலி செய்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேம்பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவொற்றியூர் பகுதிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story