காஞ்சீபுரம் அருகே விவசாயி அடித்துக்கொலை உறவினர் கைது


காஞ்சீபுரம் அருகே விவசாயி அடித்துக்கொலை உறவினர் கைது
x
தினத்தந்தி 26 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-27T02:01:34+05:30)

காஞ்சீபுரம் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தங்கை கணவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் காந்திரோட்டை சேர்ந்தவர் ரவி என்கிற ராஜசேகர் (வயது 47). விவசாயி. இவரது தங்கையின் கணவர் பாலாஜி (38). இவரும் அதே பகுதியில் வசித்து வந்தார். ரவியின் தந்தை சம்பாதித்த சொத்தில் பாகப்பிரிவினை நடந்து வந்தது. இது குறித்து ரவிக்கும் அவரது தங்கையின் கணவர் பாலாஜிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

நேற்று காலை ரவி வயல்வெளிக்கு சென்றபோது பாலாஜி சொத்து குறித்து கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி இரும்பு கம்பியால் ரவியின் தலையில் அடித்ததாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த ரவி அங்குள்ள தரைக்கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் பரிதபமாக இறந்தார். இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் ரவியின் மனைவி ஆனந்திக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து ஆனந்தி மாகரல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், மாகரல் சப்–இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் பாலாஜியை கைது செய்தனர்.


Next Story