பெண்கள் விடுதி, குழந்தைகள் இல்லங்களை நடத்த உரிமம் பெற வேண்டும் கலெக்டர் தகவல்


பெண்கள் விடுதி, குழந்தைகள் இல்லங்களை நடத்த உரிமம் பெற வேண்டும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 July 2017 10:15 PM GMT (Updated: 26 July 2017 9:11 PM GMT)

குமரி மாவட்டத்தில் பெண்கள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்களை நடத்த உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதி, கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி செய்யும் பெண்கள் தங்கும் விடுதிகள், மெட்ரிக் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி விடுதிகள், தொழில் நிறுவனங்களில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களை தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டத்தின் கீழ் பதிவு செய்து அதற்கான உரிமம் பெறுதல் அவசியம்.

அதன்படி, 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் நடத்துவோர் உரிமம் அல்லது உரிமம் பெற பதிவு செய்வது குறித்த விவரங்களை அறிவதற்கும், விண்ணப்பங்கள் பெறுவதற்கும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இதுபோல், 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் விடுதிகள், பணிச்செய்யும் பெண்கள் தங்கும் விடுதிகள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலுள்ள பெண்கள் விடுதிகள் நடத்துவோர் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் உள்ள மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்தையும், மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு இல்லங்கள் நடத்துவோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி அலுவலகத்தையும்,

அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் செயல்படும் விடுதிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரியின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் நேரில் தொடர்பு கொண்டு உரிமம் அல்லது உரிமம் பதிவுசெய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒரு மாதத்திற்குள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஏதேனுமொரு சட்டத்தின் கீழ் பதிவு அல்லது உரிமம் பெற்றிருப்பின், இச்சட்டத்தின் கீழ் பதிவு பெறுதல் போதுமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story