முகேஷ் அம்பானியின் பங்களாவில் அதிக இரைச்சலுடன் பாடல் ஒலித்ததாக புகார்


முகேஷ் அம்பானியின் பங்களாவில் அதிக இரைச்சலுடன் பாடல் ஒலித்ததாக புகார்
x
தினத்தந்தி 26 July 2017 10:15 PM GMT (Updated: 2017-07-27T02:55:09+05:30)

மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில் அதிக இரைச்சலுடன் பாடல் ஒலித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

மும்பை,

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மும்பை அல்டாமவுண்ட் பகுதியில் உள்ள தன்னுடைய அந்திலீலா பங்களாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த பங்களா 27 மாடிகளை கொண்டு வானுயர கட்டப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் பங்களாவில் இருந்து அளவுக்கு அதிகமாக இரைச்சலுடன் பாடல் ஒலிப்பதாக மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஆன்லைனில் நேற்று அதிகாலை 1.04 மணிக்கு புகார் வந்தது.

உடனடியாக இதனை ஆய்வு செய்த போலீசார், இதுபற்றி காம்தேவி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், போலீஸ்காரர் ஒருவர் முகேஷ் அம்பானியின் பங்களாவுக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு பாடல் ஒலிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, அவர் அங்கிருந்து திரும்பினார். எனினும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காம்தேவி போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் நேதாஜி போபலே நிருபர்களிடம் கூறினார்.

முகேஷ் அம்பானியின் பங்களாவில் 6–வது தளத்தில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். சமீபத்தில் அங்கு தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story