பாகூரில் காதல் பிரச்சினையில் மோதல்: ஆயுதங்களுடன் 2 பிரிவினர் திரண்டதால் பதற்றம்


பாகூரில் காதல் பிரச்சினையில் மோதல்: ஆயுதங்களுடன் 2 பிரிவினர் திரண்டதால் பதற்றம்
x
தினத்தந்தி 27 July 2017 12:00 AM GMT (Updated: 26 July 2017 10:54 PM GMT)

காதல் விவகாரத்தில் பாகூரில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டனர். இதையொட்டி போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பஸ்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் பேட் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மற்றொரு தரப்பைச் சேர்ந்த பெண்களை காதலித்து வந்த நிலையில் அவர்களை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இருதரப்பினரும் மோதிக்கொண்டதால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சுவடு மறைவதற்குள் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரும், பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து தலைமறைவானார்கள். இதுபற்றி தெரியவந்ததும் இருவரது தரப்பைச் சேர்ந்தவர்களும் காதல் ஜோடியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக பாகூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு ஏற்கனவே நின்று கொண்டு இருந்த சிலர் தப்பிச் சென்ற காதல்ஜோடி குறித்து விசாரித்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையொட்டி விஜயபிரதாப் என்ற வாலிபர் தனது தாயாருடன் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரையும், அவரது தாயாரையும் மற்றொரு தரப்பினர் தாக்கினார்கள். இதுபற்றி தெரியவந்ததும் விஜயபிரதாப் தரப்பு ஆதரவாளர்கள் 200-க்கு மேற்பட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர்.

எதிர்தரப்பில் இருந்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் திரண்டார்கள். இதனால் இருகோஷ்டிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம், இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், பாபுஜி, அறிவு செல்வம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் குவிக்கப்பட்டனர். பிரச்சினை எதுவும் செய்யாமல் கலைந்து செல்லும்படி இருதரப்பினரையும் போலீசார் எச்சரித்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து திடீரென்று தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்தது.

இதனால் நிலவரத்தை கட்டுப்படுத்த அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். உடனே அவர்கள் நாலாபுறமும் கலைந்து ஓடினார்கள். ஊர் பகுதியில் ஆங்காங்கே கூட்டமாக நின்றவர்களையும் போலீசார் விரட்டி அடித்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே தாக்கப்பட்ட வாலிபர் விஜயபிரதாப்பும், அவரது தாயாரும் சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டபடி 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இந்த நேரத்தில் சில இடங்களில் ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. ஒரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. கடை ஒன்றில் இருந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை இருந்து வந்ததால் புதுச்சேரி, விழுப்புரத்தில் இருந்து பாகூருக்கு பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் பாகூர் பகுதி முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story