டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி? நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு பொது மக்கள் கோரிக்கை


டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி? நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு பொது மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 July 2017 7:30 AM IST (Updated: 31 July 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

கிண்டியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி? நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு பொது மக்கள் கோரிக்கை

ஆலந்தூர்,

சென்னை கிண்டி மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவருடைய மகள் நிஷா (வயது 5). இவள், அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். கடந்த சில தினங்களாக நிஷா, கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியால் துடிதுடித்து வந்தாள்.

மாணவியை சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அவரது பெற்றோர் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவிக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் சிறுமி நிஷா பரிதாபமாக இறந்து விட்டாள். ஆனால் சிறுமி நிஷா, டெங்கு காய்ச்சலால்தான் இறந்து விட்டாள் என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே தங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

தீவிபத்தில் ஒருவர் சாவு

* பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான தம்பியப்பா (75) உடல் நலம் இல்லாமல் தனியறையில் படுக்கையில் இருந்து வந்தார். அங்கு மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி அவர் உடல் கருகி பலியானார்.

* தண்டையார்பேட்டை பகுதியில் சரத் (24) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். அங்கு இருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* சென்னை ஈக்காட்டுதாங்கல் தொழில் அதிபர் உதயபாலன் கொலை வழக்கில் சிக்கிய பிரபாகரன் (35) குண்டர் சட்டத்தில் கைதானார். சீனிவாசன் (35) என்பவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

* கொடுங்கையூரை சேர்ந்த பிளஸ்–2 மாணவரான முத்து நேற்று தனது நண்பர்கள் 7 பேருடன் கடலில் குளித்தார். ராட்சத அலை முத்துவை கடலுக்குள் இழுத்து சென்றது. அவரை தேடிவருகிறார்கள்.

* கல்லூரி மாணவர்களான விஜய் (20), சீனிவாசன் (20) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் ராயபுரம் சென்றபோது சாலையை கடந்த 40 வயது மதிக்கத்தக்கவர் ஒருவர் மீது மோதியதில் அவர் இறந்தார். மாணவர்கள் காயம் அடைந்தனர்.

* ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள மின்மாற்றியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் ஆஸ்பத்திரியில் மின் தடை ஏற்பட்டது. ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


Next Story