அப்துல்கலாம் மணிமண்டபத்திற்குள் படம் பிடிக்க பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தடை


அப்துல்கலாம் மணிமண்டபத்திற்குள் படம் பிடிக்க பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தடை
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 31 July 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

அப்துல்கலாம் மணிமண்டபத்திற்குள் கேமரா, செல்போன் மூலம் படம் பிடிக்க பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த 27–ந் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடி நேரில் வந்து திறந்து வைத்து வைத்தார். பிரதமர் திறந்து வைத்த கலாம் மணிமண்டபத்தில் கலாம் வீணை வாசிப்பது போன்று வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலை, குழந்தைகளுடன் இருப்பது போன்று மெழுகால் ஆன சிலை, கலாம் ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில் அமர்ந்திருப்து போன்ற சிலை மற்றும் அவரது பல்வேறு சாதனைகள் அடங்கிய பொருட்கள், அவர் பயன் படுத்திய படித்த ஏராளமான புத்தகங்கள்என பல்வேறு தகவல்களும் மணிமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.

அப்துல்கலாம் மணிமண்டபத்தை காண தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர். மிகுந்த ஆச்சரியத்துடன் பார்ப்பதோடு தங்களது செல்போன்களிலும் படமும் எடுத்து சென்றனர்.

மணிமண்டபத்தில் கலாம் வீணை வாசிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ள சிலை அருகே பகவத்கீதை புத்தகம் மட்டுமே இடம் பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பியது..அதை தொடர்ந்து பகவத்கீதை அருகே குரான், பைபிள் ஆகியவை நேற்று முன்தினம் வைக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே பாதுகாப்பு கருதி பைபிள், குரான் ஆகிய 2 புத்தகங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு சிலை அருகே உள்ள கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் அப்துல்கலாம் மணிமண்டபத்தை காண வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்புதுறை அதிகாரிகள் நேற்று திடீரென பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். மணிமண்டபத்தினுள் செல்போன் கொண்டு செல்ல கூடாது எனவும், உள் பகுதியில் செல்போன் மற்றும் கேமரா மூலம் யாரும் படம் பிடிக்க கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்தனர்.

பாதுகாப்புதுறை அதிகாரிகளின் புதிய கட்டுப்பாடுகள் மணி மண்டபத்தை காண வந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலாமின் பல சாதனைகள் அடங்கிய பொருட்களை படம் பிடிக்க அதிகாரிகள் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் அதற்கு மத்திய–மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மணிமண்டபத்தை காண வந்த அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மணிமண்டபத்தின் பிரதான் நுழைவு வாயில் திறக்கப்படாமல் வலதுபிற வாசல் வழியாகவே உள்ளே செல்ல வேண்டியுள்ளது. பிரதான வாயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story