டாஸ்மாக் கடைக்கு அனுமதி வழங்க கூடாது கலெக்டரிடம் மனு
மல்லாங்கிணறு அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை தொடங்க அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி அந்த கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது மேலதுலுக்கன்குளம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
மல்லாங்கிணறு அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் 600 வீடுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. எங்கள் கிராமத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் கிராமத்து பெண்கள் வேலைக்கு நடந்து செல்லும் சாலையில் தான் டாஸ்மாக் கடைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதனால் எங்கள் கிராமத்து பெண்களுக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே எங்கள் கிராமத்தில் பணிபுரியும் ஆசிரியைகளிடம் தங்கசங்கலி பறிக்கப்பட்டு அது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
டாஸ்மாக் கடை அமைப்பதால் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் என கிராமத்து பெண்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். தற்போது மல்லாங்கிணறை சுற்றியுள்ள பகுதியில் டாஸ்மாக் கடை இல்லாததால் அங்கு சட்டம்–ஒழங்கு பிரச்சினை ஏற்படுவது இல்லை. இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் கிராமத்தின் அமைதி சீர்குலைந்துவிடும். எனவே எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்க கூடாது. அவ்வாறு அனுமதி வழங்கும்பட்சத்தில் எங்கள் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.