தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டரிடம் விவசாயிகள் மனு
கரும்புகளை தனியார் ஆலைக்கு வெட்டி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காய்ந்த கரும்புகளுடன் வந்து கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு டி.எடையார், டி.புதுப்பாளையம், பையூர், சிறுமதுரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள், காய்ந்த கரும்புகளுடன் வந்து கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலையில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 3 ஆண்டுகளாக சரிவர இயங்கவில்லை. இதனால் ஆலை எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கரும்புகளை பயிர் செய்து தனியார் ஆலைக்காக வெட்டி அனுப்பி வருகிறோம். இதை வைத்துதான் எங்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில் வறட்சி காரணமாக பெரும்பாலான கரும்புகள் காய்ந்துவிட்டன. மீதமுள்ள கரும்புகளை வெட்டி தனியார் ஆலைக்கு எங்களை அனுப்ப விடாமல் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர். தற்போது தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரையும், நாங்கள் பயிர் செய்த கரும்புகளை எடுக்க வேண்டாம் என்று கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நாங்கள் பயிர் செய்த கரும்புகளை தனியார் ஆலைக்கு வெட்டி அனுப்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.