கீரமங்கலம் பகுதியில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் சாவு
கீரமங்கலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 2 பசுமாடுகள் பரிதாபமாக இறந்தது.
கீரமங்கலம்,
கீரமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ–மாணவிகள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீரமங்கலம் பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது. இதன் ஒருபகுதியாக கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடியில் பலத்த மின்னலுடன் மழை பெய்தது.
2 பசுமாடுகள் சாவு
இதில் அதே கிராமத்தை சேர்ந்த செல்வராசு என்பவரது வீட்டில் கட்டிருந்த பசு மாடு மின்னல் தாக்கி இறந்தது. அதே போல அதே பகுதியைச் சேர்ந்த நல்லையா என்பவரின் வீட்டின் அருகே நின்ற தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதால் அருகில் நின்ற மற்றொரு மாடும் இறந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன், கால்நடை மருத்துவர் செல்வராசு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.