காவலர் பணிக்கு பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 793 பேர் பங்கேற்பு
காவலர் பணிக்கு பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 793 பேர் பங்கேற்றனர்.
திருச்சி,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2–ம் நிலை காவலர், 2–ம் நிலை சிறை வார்டர்கள் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்திலும் கடந்த 27–ந்தேதி உடற்தகுதி தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் அவர்களுடைய சான்றிதழ் சரிபார்ப்பு, எடையளவு, உயரம் மற்றும் மார்பளவு அளக்கப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டமும் நடத்தப்பட்டது.
நேற்று பெண்களுக்கான உடற்தகுதி தேர்வுக்கு ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 793 பேர் பங்கேற்க வந்தனர். முதலில் அவர்களுடைய சான்றிதழ் சரிபார்ப்பும், உயரம் உள்ளிட்டவை அளக்கப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த தேர்வை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் திருச்சி சரக டி.ஐ.ஜி. பவானீஸ்வரி மேற்பார்வையில் உடல்தகுதி தேர்வு நடந்தது. இன்றுடன் (புதன்கிழமை) பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு முடிவடைகிறது. இதில் கலந்து கொள்ள 497 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
காவலர் பணிக்கான ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு அடுத்த கட்டமாக நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல் அல்லது நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம் நடத்தப்படும்.