விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா
திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நோட்டீசு கொடுக்க சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
சுமார் 8 ஆயிரம் அடி நீளத்தில் உள்ள திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையை (ரன்வே) 12 ஆயிரத்து 500 அடியாக நீட்டிப்பு செய்தல் மற்றும் விரிவாக்க பணிகளுக்காக 345 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. திருவெறும்பூர் தாலுகா, திருச்சி கிழக்கு தாலுகாவில் இந்த நிலங்கள் அமைந்து உள்ளன. தனியார் பட்டா நிலம், அரசு புறம்போக்கு மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான தமிழக அரசின் அறிவிப்பு சர்வே எண் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கிழக்குறிச்சி, கீழ கல்கண்டார் கோட்டை, நத்தமாடிப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்துக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டு வந்தனர். அவர்கள் விமான நிலைய விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று கோரி மனு கொடுத்து விட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று திருச்சி கிழக்கு தாலுகாவை சேர்ந்த கொட்டப்பட்டு வருவாய் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில் வசிப்பவர்களிடம் முன்னறிவிப்பு நோட்டீசு கொடுப்பதற்காக திருச்சி தெற்கு வருவாய் ஆய்வாளர் கோமதி, கொட்டப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி பத்மநாதன் ஆகியோர் சென்றனர்.
நிலம் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் ஊருக்குள் வந்ததை அறிந்ததும் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். எங்கள் வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும், வசிப்பிடமான வீடுகளையும் காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே செல்வது? எங்களுக்கு எதிரான இந்த திட்டத்தை கைவிட வேண்டும், இல்லை என்றால் நாங்கள் சாலை மறியல் செய்வோம் என்று கூறி அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் அதிகாரிகள் மேற்கொண்டு எந்த பணியையும் செய்ய முடியாமல் தவித்தனர்.
இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி அவர்கள் நோட்டீசு வினியோகம் செய்யும் பணியை கைவிட்டு விட்டு தாலுகா அலுவலகத்துக்கு திரும்பினர். இந்த சம்பவம் நேற்று கொட்டப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவெறும்பூர் தாலுகா கிழக்குறிச்சி கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் நிலமும், கீழ கல்கண்டார்கோட்டை கிராமத்தில் சுமார் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படவேண்டியது உள்ளது. தாசில்தார் ஷோபனா அந்த கிராமங்களுக்கு நேற்று அதிகாரிகளுடன் சென்று நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.