ராமேசுவரம்–அயோத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடி, சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


ராமேசுவரம்–அயோத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடி, சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடி, சிவகங்கை ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி,

பிரதமர் மோடி கடந்த 27–ந்தேதி ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழாவுக்கு வந்திருந்தார். அப்போது ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி வரையிலான புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை அயோத்தி சென்றடைகிறது. மறுமார்க்கமாக அயோத்தியில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை ராமேசுவரம் வந்தடைகிறது. பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேசுவரம், மானாமதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை வழியாக அயோத்தி செல்கிறது. இந்த ரெயிலால் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவிற்கு சுற்றுலா, ஆன்மிகம் தொடர்பாக வருவோருக்கு பயனுள்ளதாக உள்ளது.

ஆனால் ராமேசுவரம்–அயோத்தி செல்லும் ரெயில் ராமேசுவரத்தில் புறப்பட்டு நேரடியாக மானாமதுரை வந்து, பின்னர் புதுக்கோட்டையில் நின்று செல்கிறது. இடையே முக்கிய நகரங்களாக உள்ள சிவகங்கை, காரைக்குடியில் நின்று செல்வதில்லை. சுற்றுலா நகராக உள்ள காரைக்குடியிலும், புராதன நகராக விளங்கும் சிவகங்கையிலும் இந்த ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி.திராவிடமணி கூறுகையில், ராமேசுவரம்–அயோத்தி ரெயிலால் வட இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களையும், தென் இந்தியாவில் உள்ள சுற்றுலா தலம், ஆன்மிக தலங்களையும் பயணிகள் எளிதில் பார்த்து பயனடையும் வகையில் இயக்கப்படுகிறது. ஆனால் மதுரை ரெயில்வே கோட்டத்தில் உள்ள காரைக்குடி, சிவகங்கையில் இந்த ரெயில் நின்று செல்வதில்லை. இதனால் சுற்றுலா நகரான காரைக்குடி, புராதன நகரான சிவகங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் புதுக்கோட்டை அல்லது மானாமதுரையில் இறங்கி பின்னர் தான் வரமுடிகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும், உள்ளூர் பயணிகள் பயனடையும் வகையிலும் காரைக்குடி மற்றும் சிவகங்கையில் அயோத்தி–ராமேசுவரம் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story