குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் சாலை மறியல்


குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:00 AM IST (Updated: 2 Aug 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலையில் அரசுக்கு சொந்தமான ஏகலைவா உண்டு உறைவிட மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கல்வராயன்மலையை சேர்ந்த மலைவாழ் இன மாணவர்கள் 460 பேர் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ–மாணவிகள் நுற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு, வெள்ளிமலை பஸ் நிறுத்தத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் உடனே செய்து தரக்கோரி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியபடி வெள்ளிமலை–கரியாலூர் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கரியாலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், அடிப்படை வசதிகள் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்ற மாணவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து வகுப்பறைகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story