ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கொலை: கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கொலை: கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கொலை வழக்கில் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரில் வசித்து வந்தவர் அமல்ராஜ். இவருடைய மனைவி ஜூலியா(வயது59). இவர் பள்ளியக்ரஹாரம் அருகே உள்ள கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனியாக வசித்து வந்த ஜூலியா அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்யப்பட்டார். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரையும், அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, செல்போனையும் காணவில்லை.

கார் டிரைவரும் மாயமானதால் அவர் தான் ஜூலியாவை கொலை செய்துவிட்டு காரையும், தங்க சங்கிலி, செல்போனையும் திருடிச் சென்று இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி கார் டிரைவரான திருச்சி அருகே திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த நாகராஜ் மீது தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். நேற்றுமுன்தினம் தஞ்சை நாஞ்சிக்கோட்டை பைபாஸ் சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கார் டிரைவர் வாக்குமூலம்

அப்போது அந்த வழியாக கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் 3 பேரும், திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்த நாகராஜ்(25), தஞ்சை விளார்ரோடு காயிதேமில்லத் நகர் 19-வது தெருவை சேர்ந்த மில்டன்(27), சித்ரா(25) என்பது தெரியவந்தது.இதையடுத்து நாகராஜை தனியாக அழைத்து சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜூலியாவை கொலை செய்துவிட்டு 2 பவுன் சங்கிலி, செல்போன், ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார். போலீஸ் விசாரணையில் நாகராஜ் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சென்னை, திருச்சியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களில் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு வேலையின்றி இருந்தேன். தஞ்சையில் உள்ள எனது பெரியப்பா மகள் சித்ராவுடன் செல்போனில் பேசி, எனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு தனது கணவர் மில்டனுடன் பேசுமாறு கூறினார். மைத்துனரை தொடர்பு கொண்டு பேசியபோது உடனே தஞ்சைக்கு புறப்பட்டு வருமாறு கூறினார்.

அதன்படி தஞ்சைக்கு வந்தேன். பின்னர் எனது அக்காளும், மைத்துனரும் என்னை அழைத்து கொண்டு ஜூலியா வீட்டிற்கு சென்றனர். அங்கு எனக்கு கார் ஓட்ட தெரியும் என்றும், வேலை கொடுக்க வேண்டும் என்றும் கூறினர். அதை கேட்ட அவர், தான் சொந்தமாக கார் வைத்து இருப்பதாகவும், ஓய்வூதியம் தொடர்பாக பேசுவதற்கு அடிக்கடி வெளியே செல்ல வேண்டியது இருப்பதால் பகலில் தனது வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என்றார். இரவு நேரத்தில் எனது அக்காள் வீட்டிற்கு வந்துவிடுவேன்.

வசதியாக வாழ

ஒரு நாள் ஜூலியாவை அழைத்து கொண்டு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றேன். அங்கு அவர் பணத்தை எடுக்கும்போது அதிக பணம் அவரது வங்கி கணக்கில் இருப்பதை அறிந்து கொண்டேன். மறுநாள் நான், எனது அக்காள், மைத்துனருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தபோது, நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். ஆனால் ஜூலியா வசதியாக, பெரிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரிடம் இருக்கும் பணம், தங்க சங்கிலியை திருடிவிட்டால் நாமும் வசதியாக வாழலாம் என கூறினேன்.

அதை இருவரும் ஏற்று கொண்டனர். அதன்படி கொலை நடப்பதற்கு முன்பு ஜூலியாவை காரில் அழைத்து கொண்டு பழனியப்பாநகரில் உள்ள லட்சுமணன் என்பவரது வீட்டிற்கு சென்றோம். அங்கு காலை உணவு சாப்பிட்டோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஒரு கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்று ஓய்வூதியம் தொடர்பாக ஒரு கோரிக்கை மனு தயார் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தோம். காரை விட்டு இறங்கியவுடன் வீட்டிற்குள் அவர் சென்றார். நானும் வீட்டிற்குள் நுழைந்தேன். அங்கு சோபாவில் அமர்ந்து இருந்த ஜூலியாவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த தங்கசங்கிலியை பறித்து செல்ல முடிவு செய்தேன்.

அதன்படி அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து ஜூலியாவின் தலையில் வெட்டினேன். அதில் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து பலியானார். உடனே அவர் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலி, மேஜையில் இருந்த செல்போன், ரூ.15 ஆயிரத்தை எடுத்து கொண்டு வெளியே வந்தேன். பின்னர் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டேன். வரும்வழியில் ஜூலியாவுக்கு சொந்தமான செல்போனில் இருந்து மைத்துனரை தொடர்பு கொண்டு பேசும்போது, ஜூலியாவை கொலை செய்துவிட்டு தங்கசங்கிலி, பணத்துடன் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தேன். அவர் எனது அக்காளுடன் தஞ்சை பழைய பஸ் நிலையம் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அருகே நிற்பதாக கூறினார். அங்கு சென்ற நான் 2 பேரையும் அழைத்து கொண்டு திருச்சி நோக்கி சென்றேன்.

சென்னை

அப்போது காரை ரூ.5 லட்சத்திற்கு விற்றுவிட்டு கஷ்டம் இல்லாமல் வாழலாம் என எங்களுக்குள் பேசினோம். வல்லம் அருகே கார் சென்றபோது குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதாகவும், நாங்கள் 2 பேரும் வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் வருவதாகவும் கூறினர். இதனால் 2 பேரையும் கீழே இறக்கிவிட்டுவிட்டு திருவெறும்பூரில் உள்ள எனது வீட்டிற்கு சென்றேன். அங்கு ஆடைகளை மாற்றிவிட்டு, ரத்தக்கறை படித்த ஆடையை காரின் பின்புறம் வைத்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றேன். அங்கு எனது நண்பர் வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்தேன். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் தஞ்சைக்கு வந்து எனது அக்காளுடன் மைத்துனரையும் அழைத்து கொண்டு காரில் சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டு விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

3 பேர் கைது

இதையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்த மில்டன், அவரது மனைவி சித்ரா ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் தஞ்சை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story