டெல்லி மேல்–சபை தேர்தலில் குஜராத் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் பரமேஸ்வர் சொல்கிறார்
டெல்லி மேல்–சபை தேர்தலில் குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று அக்கட்சியின் கர்நாடக தலைவர் பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரு,
டெல்லி மேல்–சபை தேர்தலில் குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று அக்கட்சியின் கர்நாடக தலைவர் பரமேஸ்வர் கூறினார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
காங்கிரஸ் மாநாடு ரத்துகர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் வருகிற 4–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் மாநாடு நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் முன்னாள் முதல்–மந்திரி தரம்சிங் மரணம் அடைந்ததை அடுத்து இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டு, அதை 12–ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். ஐதராபாத்–கர்நாடக பகுதியில் உள்ள 6 மாவட்டங்களுக்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொண்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது போன்றவை குறித்து அந்த பகுதி மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்தில் அங்கு மாநாடுகளை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த மாநாடுகளில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்பட முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
வெற்றி பெறுவது உறுதிபூத் கமிட்டி மட்டத்தில் குழுக்களை அமைக்க வருகிற 15–ந் தேதி கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் (செப்டம்பர்) மாதம் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு,வீடாக சென்று கர்நாடக காங்கிரஸ் அரசின் சாதனைகள் மற்றும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவார்கள். மேலும், குஜராத் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் தங்கி இருப்பது குறித்து கேட்கிறீர்கள்.
நான் இப்போது தான் வெளிநாட்டு பயணத்தில் இருந்து வந்துள்ளேன். இதுபற்றி தகவல்களை கேட்டு பெறுவேன். டெல்லி மேல்–சபை தேர்தலில் குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. குஜராத்தில் காங்கிரசுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதனால் அங்கு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். இதனால் பா.ஜனதா தலைவர்கள் பயத்தில் உள்ளனர்.
கட்சியில் விவாதிக்கவில்லைலிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக அறிவிக்கும் விவகாரம் குறித்து எங்கள் கட்சியில் விவாதிக்கவில்லை. தேவைப்பட்டால் இதுபற்றி எங்கள் கட்சியின் செயற்குழுவை கூட்டி விவாதிப்போம். மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து முதல்–மந்திரி முடிவு எடுப்பார். மந்திரிகளுக்கு மாவட்டங்களின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். வளர்ச்சி திட்டங்களையும் விரைவாக செயல்படுத்துவார்கள்.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.