கெங்கேரி–ராமநகர், துமகூரு–யஷ்வந்தபுரம் இடையே பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தை அமல்படுத்த திட்ட அறிக்கை தயார்
ராமநகர்–கெங்கேரி, துமகூரு–யஷ்வந்தபுரம் இடையேயான பெங்களூரு புறநகர் ரெயில் திட்ட அறிக்கை தயாராக உள்ளதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு,
ராமநகர்–கெங்கேரி, துமகூரு–யஷ்வந்தபுரம் இடையேயான பெங்களூரு புறநகர் ரெயில் திட்ட அறிக்கை தயாராக உள்ளதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
விரிவான திட்ட அறிக்கைபெங்களூருவில் புறநகர் ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு கெங்கேரியில் இருந்து ராமநகர் வரையிலும், துமகூருவில் இருந்து யஷ்வந்தபுரம் வரையிலும், யஷ்வந்தபுரத்தில் இருந்து சர்வதேச விமான நிலையம் வரையிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் மெட்ரோ முதல் கட்ட திட்ட பணிகள் முடிவடைந்துவிட்டது. தற்போது 2–வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்துடன் மெட்ரோ 2–வது கட்ட திட்டத்தில் ‘ஏ‘ பிரிவில் சில்க் போர்டு சர்க்கிளில் இருந்து கே.ஆர்.புரம் வரையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் அமல்படுத்தப்படுகிறது.
உயர்த்தப்பட்ட பாதை அமைக்க...நாகவரா முதல் சர்வதேச விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. யஷ்வந்தபுரத்தில் இருந்து எலகங்கா வரை ரெயில் பாதை அமைக்க சாத்தியம் இல்லை. அதனால் உயர்த்தப்பட்ட பாதை அமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் சாதக–பாதகங்கள் குறித்து ஆராய்ந்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
பெங்களூரு நகரின் எல்லை தற்போது 800 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. இதனால் நகரில் பிரச்சினைகள் அதிகரித்துவிட்டன. இந்த பிரச்சினைகளை தீர்க்க எங்கள் அரசு திடமாக செயல்பட்டு வருகிறது. நகரின் வளர்ச்சிக்காக கர்நாடக அரசு ரூ.7,300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இவ்வளவு நிதி ஒதுக்கி இருந்தாலும், இதற்கான வளர்ச்சி பணிகளும் அனைத்தும் இப்போதே முடிக்க முடியாது.
110 கிராமங்களுக்கு குடிநீர் சேவைஇந்த ரூ.7,300 கோடி திட்டத்தில் இதுவரை ரூ.3,000 கோடி மதிப்பீட்டிலான திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. 110 கிராமங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 140 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கும் கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
சாக்கடை கால்வாயை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் பல்வேறு ஏரிகள் உள்ளன. கழிவுநீரை சுத்திகரிக்கும் மையங்கள் 80 சதவீத ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏரிகளிலும் கழிவுநீர் சுத்திகரிக்கும் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் பெல்லந்தூர், வர்த்தூர் ஏரிகளில் மாசு ஏற்படுவதை தடுத்து தூய்மையை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 ஆயிரம் டன் குப்பைநகரில் தினமும் 4 ஆயிரம் டன் குப்பை சேருகிறது. குப்பை பிரச்சினையை தீர்ப்பது கடும் சவாலாக உள்ளது. இந்த பிரச்சினையை இன்னும் முழுமையாக தீர்க்கவில்லை. நகரை சுற்றிலும் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் குப்பை கிடங்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஜெர்மனி நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. விரைவில் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
இரும்பு மேம்பாலம் கட்ட முடிவு எடுத்தால், அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சொல்கிறார்கள். ஏழை மக்கள் பயன்பெற இந்திரா மலிவு விலை உணவகத்தை அமைத்தால் அதில் ரூ.65 கோடி ஊழல் நடந்து இருப்பதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். இவ்வாறு தவறான குற்றச்சாட்டுகளை கூறினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்று பா.ஜனதாவினருக்கு யாராவது ஜோதிடம் கூறி இருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். இவ்வாறு தவறான குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் பெங்களூருவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இது அவர்களின் தொழிலாக உள்ளது.
மக்களுக்கு நிரந்தர பயன்பெங்களூரு நகரம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது அல்ல. நகர வளர்ச்சிக்கு ஏற்ப தேவையான திட்டங்களை தீட்டி அமல்படுத்துகிறோம். நகரில் சாலைகள் ‘டெண்டர் சூர்‘ திட்டத்தின் கீழ மேம்படுத்தப்படுகின்றன. இந்த சாலைகள் நீண்ட நாட்களுக்கு சேதம் அடையாமல் இருக்கும். அதே போல் பல முக்கியமான சாலைகள் கான்கிரீட் சாலைகளாக மாற்றி வருகிறோம். இந்த பணிகள் நடைபெறும் பகுதிகளில் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. ஆனால், இதனால் மக்களுக்கு நிரந்தர பயன் கிடைக்கும்.
நகரில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் அரசியல் பிரமுகர்களும் அடங்குவார்கள். இந்த சட்டவிரோத விளம்பர பலகைகளை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். இதில் அரசியல் தலையீடு இருக்காது. நானும் எனது தொகுதியில் எனது படத்தை போட்டு விளம்பர போஸ்டர்களை ஒட்டக்கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
திறம்பட நிர்வகித்து வருகிறேன்நான் அரசியலுக்கு எதிர்பாராமல் வந்தவன். நான் எப்போதும் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவன் கிடையாது. வீரேந்திரபட்டீல் முதல்–மந்திரியாக இருந்தபோது எனக்கு மந்திரி பதவி கிடைத்தது. இதுவரை பல்வேறு இலாகாக்களை நிர்வகித்து உள்ளேன். இப்போது முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூரு நகர வளர்ச்சித்துறையை வழங்கியுள்ளார். அதை திறம்பட நிர்வகித்து வருகிறேன்.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.