மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பலி லாரி-கார் மோதியதில் 4 பேர் காயம்


மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பலி லாரி-கார் மோதியதில் 4 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது லாரி-கார் மோதிக்கொண்டதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்,

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியின் பின்னால் சேலம் ஆச்சாங்குட்டப்பட்டியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன ஊழியர் அறிவழகன் (வயது 25) மற்றும் அவருடைய நண்பர் லட்சுமணன் (26) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். லட்சுமணன் மோட்டார்சைக்கிளை ஓட்ட அறிவழகன் பின்னால் அமர்ந்து இருந்தார்.

சுக்கம்பட்டி அருகே வந்தபோது லட்சுமணன் லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரில் சேலத்தில் இருந்து செங்கம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. மோட்டார்சைக்கிள் வருவதை பார்த்ததும் கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அந்தசமயம் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அறிவழகன் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினார். லட்சுமணன் தூக்கி வீசப்பட்டார்.

மேலும் லாரி மீது கார் மோதியது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதைப்பார்த்த அந்த பகுதியில் நின்றவர்கள் அங்கு திரண்டனர். இதையறிந்த வீராணம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காரில் இருந்த ராஜேந்திரன் (40), ராஜதுரை (24), மணி (65), திருமலை (33) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய அறிவழகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் லாரியின் சக்கரத்திற்கு அடியில் சிக்கி இருந்ததால் மீட்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து லாரியில் 40 டன் இரும்பு லோடு இருந்ததால் மீட்பு வாகனம் மூலம் லாரியை போலீசார் தூக்கினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தப்பட்டது. இதன் பிறகே அறிவழகனின் உடல் மீட்கப்பட்டது. அவர் வந்த மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியிருந்தது.

இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலத்திற்கு வந்த பள்ளி வாகனங்கள் சாலையில் அணி வகுத்து நின்றன. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளானர்கள். பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. 

Related Tags :
Next Story