ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்க கருவாடு வியாபாரிகள் மனு


ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்க கருவாடு வியாபாரிகள் மனு
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 3 Aug 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் கருவாடு விற்பனை செய்யும் தொழிலில் 200–க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் கருவாடு விற்பனை செய்யும் தொழிலில் 200–க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமேசுவரத்தில் உள்ள மீன்துறை அலுவலகத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில் மீன் பிடி தொழிற் சங்க நிர்வாகிகள் சேசுராஜா,எஸ்.பி.ராயப்பன் மற்றும் கருவாடு வியாபரிகள் ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக தாலுகா அலுவலகம் வந்து ஜி.எஸ்.டியில் இருந்து கருவாடுக்கு விலக்கு அளிக்கக்கோரி மீன்துறை அலுவலகத்தில் அனைவரும் மனு கொடுத்தனர். அதில், கடலில் மீன் பிடி தொழிலை சட்ட ரீதியாக அரசு வரை முறை படுத்திய காலத்தில் இருந்து இதுவரை மீனவர்கள் பிடித்து வரும் மீனுக்கோ உற்பத்தி செய்யும் கருவாடுக்கோ வரி விதிப்பு இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது மத்திய அரசு கருவாடு விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.யை விதித்துள்ளது கருவாடு உற்பத்திசெய்யும் வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவாட்டிற்கு உடனடியாக விலை நிர்ணயம் செய்ய முடியாது. மார்க்கெட்டிற்கு போய் அங்குள்ள நிலைமக்கு தக்கபடியே விலை கிடைக்கும். இந்த சூழ்நிலையில் கருவாடு உற்பத்தி,விற்பனையில் ஈடுபடும் எங்களால் ஜி.எஸ்.டி. 5 சதவீதம் செலுத்த முடியாது. இதனை மத்திய,மாநில அரசுகள் கருத்தில் கொண்டு கருவாடு உற்பத்தி விற்பனையில் ஈடுபடும் எங்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜி.எஸ்.டி. விதிப்பு கவுன்சிலின் கூட்டத்தில் இது குறித்து பேசி ஜி.எஸ்.டி.யில் இருந்து கருவாட்டுக்கு விலக்கு பெற்று தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story