ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடோனை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடோனை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஈரோடு,
ஈரோடு ரங்கம்பாளையம் சங்கர்நகர், வள்ளிமுருகன் நகர், கிருஷ்ணாநகர், கணபதிநகர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் ஈரோடு –சென்னிமலை ரோட்டில் நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கணபதிநகர் பகுதியில் உள்ள தனியார் குடோனை மூடக்கோரி திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையாளர் ஆறுமுகம், சுகாதாரத்துறை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
எங்கள் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் உணவு பொருளான பருப்பு, சோளம் மற்றும் கால்நடை தீவனமான தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் குடோனில் உள்ள சில பகுதிகளை வேறு சில நபர்களுக்கு வாடகைக்கும் விட்டுள்ளனர். இந்த இடத்தில் தினமும் 50–க்கும் மேற்பட்ட லாரிகளில் சிமெண்டு மூட்டைகளை ஏற்றுவதும், இறக்குவதுமாக உள்ளது.
இதனால் சிமெண்டு மூட்டைகளில் இருந்து துகள்கள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. குடோனில் வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்கள் மற்றும் கால்நடை தீவனங்களில் பூச்சி மற்றும் வண்டுகள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மேலும் குடோனின் முன் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் டெங்கு உள்பட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே ரங்கம்பாளையம் கணபதிநகர் பகுதியில் உள்ள குடோனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அதிகாரிகள், ‘குடோனின் முன்பகுதியில் தேங்கும் சாக்கடை கழிவுநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் டேங்கர் லாரிகள் மூலம் அகற்றப்படும். மேலும் குடோன் உரிமையாளருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு விரைவில் குடோனை மூட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சென்னிமலை ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.