விழுப்புரத்தில் தீ விபத்து: 1,100 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து சேதம்


விழுப்புரத்தில் தீ விபத்து: 1,100 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 3 Aug 2017 4:00 AM IST (Updated: 3 Aug 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,100 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன.

விழுப்புரம்,

விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் பூட்டி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று அதிகாலை அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதை பார்த்த காவலாளி உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த 10–க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து மூச்சுத்திணறல் ஏற்படும் அளவிற்கு அதிக அளவில் கரும்புகை சூழ்ந்ததால் உடனே தீயை அணைக்க முடியவில்லை.

இதையடுத்து அறையின் ஜன்னல் கதவுகளை பெயர்த்தெடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில தொலைக்காட்சி பெட்டிகள் வெப்பத்தின் காரணமாக வெடித்து சிதறின. எளிதில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டதால் அறையின் பக்கவாட்டு சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்தனர்.

பின்னர் அங்கு இருந்த தொலைக்காட்சி பெட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் 1,100 வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன.

சேதம் அடைந்த தொலைக்காட்சி பெட்டிகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story