டெல்லியில் மத்திய மந்திரிகளுடன், நாராயணசாமி சந்திப்பு: நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தல்


டெல்லியில் மத்திய மந்திரிகளுடன், நாராயணசாமி சந்திப்பு: நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Aug 2017 5:00 AM IST (Updated: 3 Aug 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய மந்திரிகளை சந்தித்தார். அப்போது அவர், நீட் தேர்வு முறையில் இருந்து புதுவை மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை நீட் தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் மாநில கல்வி திட்டத்தில் படித்த புதுச்சேரி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீட் தேர்வு முறையில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிப்பதுடன் தற்போது மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கும் பழைய நடைமுறையே நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் புதுவை மாநிலத்திற்கு திட்டமில்லா செலவினத்துக்கான நிதியை உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, வாரிய தலைவர்கள் பதவி நீட்டிப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் தீர்வு காண புதுவை அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் டெல்லி சென்றனர்.

டெல்லியில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்துறை செயலாளரை சந்தித்து புதுவை மாநிலத்தின் நிதி ஆதாரம் குறித்து பேசினார். அதையடுத்து அவர், சமூகநீதி துறை மத்திய மந்திரி தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு உறைவிடப் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் கந்தசாமி உடனிருந்தார்.

பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து நீட் தேர்வில் புதுவை மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு தெரிவிப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.

அதையடுத்து அவர், விமான போக்குவரத்து துறை மத்திய மந்திரி அசோக் கஜபதி ராஜுவை சந்தித்து புதுவையில் வருகிற 16-ந் தேதி நடக்க உள்ள விமான போக்குவரத்து சேவை தொடக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தியை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது புதுவை மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர்.

மாலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story