ரெட்டியார்பாளையம், கோரிமேடு பகுதிகளில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

ரெட்டியார்பாளையம், கோரிமேடு பகுதிகளில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது 15 பவுன் நகைகள் பறிமுதல்: மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் பெண்கள் மற்றும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களிடமிருந்து நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார் குவிந்தன. அதையடுத்து புதுவை சட்டம்–ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் உத்தரவின் பேரில் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங், இன்ஸ்பெக்டர் தங்கமணி ஆகியோர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் இனியன், குமார் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் 3 பேர் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தியபோது பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் இறங்கி தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து மற்ற 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசுக்கு சந்கேதம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை கேட்டபோது அவர்களிடம் எந்வொரு ஆவணமும் இல்லை. இதுகுறித்து நடத்திய விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
அதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்களில் ஒருவர் புதுவை கோபாலன் கடை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அரவிந்த் (வயது 19), மற்றொருவர் சிதம்பரம் பூதகனி தில்லையம்மன் நகர் மணிகண்டன் (18) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் ரெட்டியார்பாளையத்தில் 2 இடங்களிலும், கோரிமேட்டில் 2 இடங்களிலும் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்து போலீசார் நிறுத்தியதும் தப்பி ஓடியவர் கோபாலன் கடையை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது.
விசாரணையைத் தொடர்ந்து அரவிந்த், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சூர்யாவை தேடி வருகின்றனர்.