போரிவிலியில் ரெயில்வே மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு
போரிவிலியில் ரெயில்வே மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
போரிவிலியில் ரெயில்வே மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்கம்பத்தில் ஏறிய வாலிபர்மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள போரிவிலி ரெயில் நிலையத்தின் 7–ம் எண் பிளாட்பாரம் அருகே நேற்று முன்தினம் காலை வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் ரெயிலுக்கு மின்சப்ளை கொடுக்கும் உயர் அழுத்த மின்கம்பியை தாங்கி பிடித்து இருக்கும் மின்கம்பத்தின் மீது ஏறினார்.
பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை நோக்கி சத்தம் போட்டனர்.
மின்சாரம் துண்டிப்புஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர் மின்கம்பத்தின் மேல் பகுதிக்கே சென்று விட்டார். அங்கிருந்தபடி அவர் உயர் அழுத்த மின்கம்பியை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். உடனடியாக பயணிகள் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவரை மீட்பதற்காக உயர் அழுத்த மின்கம்பியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வாலிபர் மீட்புஇதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அந்த வாலிபரிடம் பேச்சு கொடுத்தபடியே மேலே ஏறி அவரை பிடித்துக் கொண்டார். பின்னர் அவர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் ஷியாம் பஸ்வான் (வயது25) என்பது தெரியவந்தது.
மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறினார். அவரிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் போரிவிலி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரெயில்கள் தாமதமாக இயங்கின.