மாயமான 2 மாணவிகள் மர்ம சாவு ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தனர்


மாயமான 2 மாணவிகள் மர்ம சாவு ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தனர்
x
தினத்தந்தி 4 Aug 2017 5:00 AM IST (Updated: 4 Aug 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

வையம்பட்டி அருகே மாயமான 2 மாணவிகள், மர்மமான முறையில் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தனர்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சரளப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற காமராஜ். கூலித் தொழிலாளியான இவரது மகள் ரதிதேவி(வயது 15). இதேபோல் வைரம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. கட்டிடத் தொழிலாளியான இவரது மகள் செல்வி (15). ரதிதேவியும், செல்வியும் ஆர்.எஸ்.வையம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. ஒன்றாக படித்து வந்தனர். பள்ளி தோழிகளான 2 பேரும் சீருடை அணிந்து நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். அதன்பிறகு இருவரும் வெகுநேரம் ஆகியும் மாலையில் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த இரு மாணவிகளின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர்கள் தோழிகள் வீட்டிற்கு சென்று இருப்பார்கள், காலையில் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என்று பெற்றோர் நினைத்தனர். மாணவிகள் மாயமானது பற்றி அந்த பகுதியில் உள்ளவர்கள் பரபரப்பாக பேசி கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை வையம்பட்டி ரெயில் நிலையத்திற்கும், தட்டாரம்பட்டி ரெயில்வே கேட்டிற்கும் இடையில், இடைக்காட்டனூர் என்ற ஊரின் பின்பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே மாணவிகள் 2 பேரும் பள்ளிச்சீருடையில் இறந்து கிடப்பதாக அந்த பகுதியினருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே பதறியடித்துக்கொண்டு மாணவிகளின் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அங்கு மாணவிகள் ரதிதேவி, செல்வி 2 பேரும் ரெயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், அவர்களின் உடல்களின் அருகே மாணவிகள் 2 பேருடைய புத்தக பைகளும் கிடந்தன. அதில் ஒரு புத்தகப்பை மட்டும் திறந்து கிடந்தது. இதுகுறித்து உறவினர்கள் விசாரித்தபோது, மாணவிகள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் அங்கு வந்து புத்தகப்பையில் மாணவிகள் எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி, வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த மாணவிகளின் உடல்களை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள். ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ராஜராஜன், மணப்பாறை தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவிகள் 2 பேருடைய உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், வையம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். போலீசார் வருவதற்கு முன்பாக மாணவிகள் எழுதி வைத்த கடிதத்தை தலைமை ஆசிரியர் எப்படி எடுத்தார்?. மாணவிகள் கடிதம் எழுதி வைத்து இருந்ததும், அந்த கடிதத்தை பையில் வைத்திருந்ததும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எப்படி தெரியும்?. அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்தது? என்று அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவிகள் மரணம் பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

மாணவர்களிடம் விசாரணை

மாணவிகள் எழுதி வைத்திருந்த கடிதத்தில் சில மாணவர்களின் பெயர்களை எழுதி இருந்ததாக தெரிகிறது. மாணவிகள் ரெயிலில் அடிபட்டு சாகவில்லை. அவர்கள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம் புகார் செய்தனர். ரெயில்வே போலீசாரும் மாணவிகள் ரெயிலில் அடிபட்டு இறந்தார்களா? அல்லது தள்ளி விடப்பட்டார்களா? தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது அவர்கள் மரணத்துக்கு வேறு காரணம் உண்டா? என்பதை பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் சொல்ல முடியும் என்று கூறினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோரை அழைத்துச்சென்று ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சட்டப்படி நடவடிக்கை – ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா கூறுகையில், ‘‘பள்ளி மாணவிகள் இறந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில், யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.


Next Story