இரோம் சர்மிளா திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் இந்து மக்கள் கட்சியினர் மனு


இரோம் சர்மிளா திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் இந்து மக்கள் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 4 Aug 2017 4:45 AM IST (Updated: 4 Aug 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

இரோம் சர்மிளா திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என போலீஸ் துணை சூப்பிரண்டு, சார் பதிவாளரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், சார் பதிவாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் குமரன் மற்றும் நகர நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கொடைக்கானல் நகரில் மணிப்பூரை சேர்ந்த இரோம் சர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இவர், வெளிநாட்டவரான தேஷ்மந்த் கொட்டின் கோ என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். அத்துடன் மணிப்பூரில் தற்போதும் ராணுவத்தினருக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாகவும், செப்டம்பர் மாதம் ஒடிசாவில் ஐ.நா. சபை சார்பில் நடைபெற உள்ள இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு இது குறித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவருக்கு ஆதரவாக அவருடைய காதலரும் பல போராட்ட குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். எனவே இவர்களின் பின்னணியில் பல வெளிநாட்டு சக்திகள், தன்னார்வ குழுக்கள் உள்ளார்களா? என்று விசாரணை நடத்த வேண்டும். அமைதிப்பூங்காவாக உள்ள கொடைக்கானல் போராட்ட களமாக மாறுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இதுமட்டுமின்றி அவர்களின் திருமண ஏற்பாடுகளையும் தடுத்து நிறுத்தி சொந்த ஊருக்கே அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டும், சார் பதிவாளரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இரோம் சர்மிளா கொடைக்கானலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார். அவர் உண்மையிலேயே போராட்டம் நடத்துபவராக இருந்தால் காஷ்மீர் மாநிலத்தில் தங்கி தான் போராட வேண்டும். அவர் கொடைக்கானலில் தங்கினால் அவரை தேடி வெளிநாட்டவர்கள், உள்நாட்டை சேர்ந்த போராளிகள் வரக்கூடும். எனவே அவருடைய திருமணத்தை தடுத்து நிறுத்துவதுடன் அவரை சொந்த ஊருக்கே அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஒடிசா மாநிலம் சென்றுவிட்டு திரும்பி வரும்போது, கொடைக்கானல் நகருக்குள் நுழைய விடாமல் போராட்டம் நடத்துவோம். முன்னதாக இன்று (அதாவது நேற்று) அவருடைய வீட்டுக்கு சேலை, பழங்களை வழங்கும் போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

பின்னர் சேலை, பழங்களுடன் இரோம் சர்மிளா வீட்டுக்கு இந்து மக்கள் கட்சியினர் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு தடுத்தார். பின்னர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். 

Related Tags :
Next Story