பவனி வரும் பட்டத்துக் காளை! அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்..


பவனி வரும் பட்டத்துக் காளை! அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்..
x
தினத்தந்தி 6 Aug 2017 2:40 PM IST (Updated: 6 Aug 2017 2:40 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை. அதனை தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. வரலாற்று தொடர்பும் கொண்டது.

தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாக தேர்வு செய்யப்படுகிறது. தேவர்+ ஆவலு என்று இதை பிரித்து பொருள் கொள்கிறார்கள். ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கிறது. தேவராவலு என்றால் தேவர்களின் பசு என்று பொருள். அந்த வகை பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது.

இந்த கோவிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவைகளை அடையாளம் காண, தானமாக கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவைகளுக்கு கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள்.

முதல் பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்வீக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். அதற்காக ஊர் மக்கள் அனைவரும் கோவில் முன்பிருக்கும் தொழுவுக்கு திரண்டு வருவார்கள்.

சுடப்படாத பச்சை மண் செங்கற்களால் மேடை அமைத்து அந்த மேடையின் மேல் தோகையுடன் கரும்புகள் வைக்கப்படும். பால் காவடி எடுத்து வரப்படும். காவடியை, கரும்பு தோகை இருக்கும் மேடையில் வைத்து வழிபாடு நடத்தப்படும். அதன் பிறகு பாரம்பரிய உருமி இசைக்கப்படும். உருமி இசை ஒலிக்க, அந்த இனத்தை சேர்ந்த காளை கள் அனைத்தும் அவிழ்த்து விடப்படும். எந்த காளை முதலில் வந்து கரும்பு தோகையை சாப்பிடுகிறதோ அதுவே பட்டத்துக் காளையாக தேர்வு செய்யப்படும். பின்னர், அந்த காளைக்கு பட்டம் சூட்டி, அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.

இந்த தேர்வு முறையை முன்னெடுத்து நடத்தும் மக்கள் 17-ம் நூற்றாண்டில் துங்கபத்ரா நதிக்கரையில் விவசாயம் செய்தவர்களின் பூர்வீகத்தை சேர்ந்தவர்கள். அங்கு நடந்த படையெடுப்பு காரணமாக, தங்களின் விவசாய நிலங்கள், வீடுகளை இழந்து, கால்நடைகளை மட்டும் அழைத்துக்கொண்டு மேற்கு தொடர்ச்சி மலை வழியாக இடம் பெயர்ந்தவர்கள். கம்பம் பகுதிக்கு வந்தபோது, அங்கு ஆட்சியில் இருந்த மன்னனிடம் சென்று, தங்களுக்கு விவசாயம் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும் வாழ்வாதாரங்களை உருவாக்கித்தரும்படி கேட்டிருக்கிறார்கள்.

அப்போது மன்னன், ‘இங்கு எம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். உங்களின் கால் நடைகளால் விவசாய பயிர்களுக்கு சேதம் வந்து விடக்கூடாது’ என்று கூறியதோடு, மாடுகளின், தன்மையை அறிய ஒரு சோதனையும் நடத்த விரும்பியிருக்கிறார். அதாவது, தோகையுடன் கரும்பை நட்டு வைத்து, அதன் முன்பு தானியங்களை குவித்துவைத்து, தானியங்கள் சிதறாமல் கரும்பை மாடுகள் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மக்களும் தங்களின் கால்நடைகளை வேண்டி நின்றனர். அப்போது ஒரு காளை தனது கால்களை மற்றொரு காளையின் மேல் வைத்து நின்ற நிலையில் கரும்பு தோகையை தின்றதாம். அதனால் தானியம் எதுவும் சிதறவில்லை. இதை பார்த்த மன்னன் வியந்து, அவர்கள் விவசாயம் செய்யவும், கால்நடைகள் வளர்க்கவும் நிலம் கொடுத்துள்ளார்.

மன்னரை வியக்கவைத்த அந்த காளையை பட்டத்துக்காளையாக மக்கள் போற்றியிருக்கிறார்கள். மேய்ச்சலுக்கு செல்லும்போது முதல் காளையாக அந்த காளை சென்றதோடு, மற்ற காளைகளையும் வழி நடத்திச் சென்றிருக்கிறது. இப்படித்தான் பட்டத்துக்காளை பாரம்பரியம் தோன்றியிருக்கிறது.



பட்டத்து காளை இறந்து விட்டால் கம்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதை மக்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். காளை இறந்த நாளில் இருந்து புதிய பட்டத்து காளை தேர்வு செய்யும் வரை அந்த கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். புதிய பட்டத்துக் காளை தேர்வு செய்த பிறகே கோவில் நடை திறந்து வழிபாடுகள் நடக்கும். பட்டத்து காளை இறந்த 3 நாட்களுக்கு ஊரில் துக்கம் கடைபிடிக்கப்படும். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தால், தவிர்க்க முடியாத சூழலில் வெளியூருக்கு சென்று திருமண நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வார்கள்.

பட்டத்துக்காளையை பராமரிக்க 4 பேரை தேர்வு செய்கிறார்கள். அவர்களை ‘கடவுளின் பிள்ளைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பட்டத்துக் காளை இறந்தால் காரியம் செய்வதும், புதிய காளையை தேர்வு செய்து மரியாதை செலுத்துவதும் இந்த கடவுளின் பிள்ளைகளின் கடமை. இதற்காக அவர்கள் நால்வரும் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யக்கூடாது என்ற வலுவான கட்டுப்பாடுகளும் உள்ளன.

அதுபற்றி, இந்த கோவிலை நிர்வகிக்கும் கம்பம் காமுகுல ஒக்கலிகர் (காப்பு) கவுடர் சங்கத்தின் பொருளாளர் அமர்நாத் விளக்குகிறார்:

“பட்டத்துக்காரர், கோடியப்பனார், பூசாரியப்பனார், பெரியமனைக்காரர் போன்ற நான்கு பதவிக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களை நாங்கள் கடவுளின் பிள்ளைகளாக பாவிக்கிறோம். இந்த பதவிக்கு வந்து விட்டால், அவர்கள் எந்த துக்க நிகழ்வுக்கும் செல்ல மாட்டார்கள். தங்களின் தாய், தந்தை, மகன் உள்பட தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால்கூட அவர்களின் உடலை பார்க்கக்கூடாது. குடும்பத்தில் யார் இறந்தாலும் அவர் களுக்கான இறுதிக்காரியங்களையும் செய்யமாட்டார்கள்.

பட்டத்து காளை இறந்து விட்டால், அந்த காளைக்கு மட்டுமே இறுதிக் காரியம் செய்வார்கள். வாழ்நாளில் இந்த 4 பேரும் 2 நிகழ்வுகளில் மட்டுமே புதிய ஆடைகள் உடுத்துவார்கள். அதாவது பட்டத்துக் காளை இறந்து விட்டால் அதற்கு காரியம் செய்யும்போதும், புதிய காளையை தேர்வு செய் யும் நாளிலும் தான் புதிய ஆடைகள் அணிவார்கள். மற்ற நாட்களில் புத்தாடை அணியமாட்டார்கள்.

இது மிகப்பெரிய தியாக வாழ்வுதான். ஆனால், இந்த பதவி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தற்போது பட்டத்துக்காரராக பரமானந்தன், கோடியப்பனாராக ஸ்டாலின், பூசாரியப்பனாராக ரமேஷ், பெரியமனைக்காரராக கோபால் ஆகியோர் உள்ளனர். இந்த பதவியில் இருப்பவர் இறந்து விட்டால், அவர்களின் வாரிசுகள் அல்லது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திருமணம் ஆகாதவரே இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பதவிக்கு வந்த பிறகுதான் அவர்கள் திருமணம் நடக்கும்” என்றார்.

கம்பம், நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவில் புதிய பட்டத்துக் காளை பவனிவந்து கொண்டிருக்கிறது. அங்கு அதற்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. கடவுளாகவும் போற்றப்படுகிறது.

கம்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசலாகிவிட்டதால், கடந்த பத்தாண்டுகளாகத்தான் பட்டத்துக்காளை தொழுவத்தில் விடப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் அதுவும் ராஜா போல் நகர் வலம் வந்துகொண்டுதானிருந்தது. தனக்கு பிடித்த வீட்டில் போய் உணவு எடுத்துக்கொண்டது. தெருவில் பட்டத்துக் காளை வருகிறது என்றாலே, ‘ஏய், ராசா வாராருப்பா... நம்ம வீட்டில் இருந்து ஏதாவது சாப்பிட கொடுப்போம்’ என்று மக்கள் உணவு வழங்கி மகிழ்ந்தார்கள். பசுந்தீவனம், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை மக்கள் விரும்பிக் கொடுத்து அவற்றை பட்டத்துக் காளை சாப்பிடும் அழகை பார்த்து ரசித்தார்கள். தற்போது வீதி உலா வராத ராஜாவை கோவிலுக்கு சென்று வழிபட்டு, தீவனம் வழங்குவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்ததும் பட்டத்துக் காளையை வணங்கி ஆசிபெற்று செல்வார்கள்.

1997-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பட்டத்துக் காளை 21-வது வயதில் கடந்த மாதம் 6-ந்தேதி இறந்தது. இதனால், ஊரே கலங்கிப்போனது. பின்னர், நல்ல நாள் பார்த்து ஜூன் 16-ந்தேதி புதிய பட்டத்து காளை தேர்வு செய்யப்பட்டது.

கம்பம் பக்கம் போனீர்கள் என்றால், இந்த ‘ராஜாவை’ பார்த்துவிட்டு வாருங்கள்!

-கதிர்மாயா, தேனி. 

Next Story