விருத்தாசலம் அருகே இளம்பெண்ணிடம் நகை பறிப்பு
விருத்தாசலம் அருகே இளம்பெண்ணிடம் நகை பறிப்பு கவரிங் என்பதால் ஏமாந்து போன கொள்ளையர்கள்
விருத்தாசலம்,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மனைவி உஷாராணி(வயது 22). இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம் அருகே பெரியவடவாடி கிராமத்தில் உள்ள உறவினர் முனுசாமி என்பவரது வீட்டுக்கு செல்வதற்காக, பெரியவடவாடி பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து முனுசாமி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் உஷாராணியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உஷாராணி, திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இதற்கிடையே மர்ம ஆசாமிகள் நகையை பார்த்த போது, அது கவரிங் நகை என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அந்த கவரிங் நகையை கீழே போட்டு விட்டு சென்றனர். இதுகுறித்து உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.