சங்ககிரி அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 8½ பவுன் நகை திருட்டு


சங்ககிரி அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 8½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 7 Aug 2017 3:45 AM IST (Updated: 7 Aug 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 8½ பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்ககிரி,

சங்ககிரி அருகே அக்கம்மாபேட்டை தீரன் சின்னமலை நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). லாரி உரிமையாளர். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடிவேல், தனது குடும்பத்தினருடன் தேவூர் அருகே குறுக்குபாறையூரில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர், ஊரில் குடும்பத்தினரை விட்டுவிட்டு நேற்று முன்தினம் அவர் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கேட்டில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 8½ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. லாரி உரிமையாளர் வடிவேல், குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் அவரது வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story