திருநின்றவூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலை
திருநின்றவூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார்.
ஆவடி,
திருநின்றவூரை அடுத்த அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற சீனிவாசன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவர் தினந்தோறும் திருநின்றவூர் முதல் ஆவடி வரை ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி ஹேமலதா (26). இவர்களுக்கு திலக் (5), தீபக் (4), தனிஷ்குமார் (3) என 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் சீனிவாசன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
பின்னர் ஆட்டோவில் மனைவி, குழந்தைகளை வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு இரவு 8 மணிக்கு நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அருந்ததிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் முகம் மற்றும் தலையில் காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்டு சீனிவாசன் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சீனிவாசனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது மனைவி ஹேமலதா மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் சர்வேஷ்ராஜ் விரைந்து சென்று பார்வையிட்டார். மேலும் கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
கொலை நடந்த இடத்தில் மது பாட்டில்கள், டம்ளர், தண்ணீர் பாக்கெட் போன்றவை இருந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு அப்போது நண்பர்களே சீனிவாசனை கொலை செய்தனரா? அல்லது வேறு காரணத்தால் யாராவது கொலை செய்தார்களா? என திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.