குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கலெக்டரிடம் பெண்கள் மனு
வீரபாண்டி, அரண்மனைப்புதூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், வீரபாண்டி பேரூராட்சி 3–வது வார்டு சன்னாசியப்பன் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் சிலர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 100 வீடுகளுக்கு மேல் உள்ளன. இங்குள்ள மக்கள் குடிநீர் பிடிப்பதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே முறையான குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இங்கு கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வராத குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
அரண்மனைப்புதூர் ஊராட்சி, வசந்தம்நகரை சேர்ந்த பெண்கள் சிலர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால், கடந்த 9 மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை. பக்கத்து தெருக்களில் சென்று குடிநீர் பிடிக்க வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
அதேபோல், சீலையம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அவர்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தை சேர்ந்த சுமார் 200 பேர் பி.ஏ.சி.எல். என்ற நிறுவனத்தில் மாதம் ரூ.500 வீதம் முதலீடு செய்து இருந்தோம். நிலம் விற்பனையில் முதலீடு செய்து இருப்பதாகவும், 5 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வு தொகையை கொடுப்பதாகவும் கூறினார்கள். முதிர்வு காலம் முடிந்த நிலையில், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. எனவே, பொதுமக்கள் கட்டிய பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு மனு எழுதிக் கொடுக்கும் பூதிப்புரத்தை சேர்ந்த கேரளபுத்திரன் (வயது 53) என்பவர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘நான் கடந்த 19 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து மனு எழுதி, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறேன். நான் 8–ம் வகுப்பு படித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளேன். பதிவு செய்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, போடியில் உள்ள ஒரு பள்ளிக்கு நூலக பதிவுரு எழுத்தர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே பல முறை இதுபோன்ற அழைப்பு வந்தும் வேலை கிடைக்கவில்லை. இந்த முறையாவது வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.