சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
கோடப்பமந்து பகுதியில், சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர்.
அதன்படி, ஊட்டி நகராட்சி 5–வது வார்டுக்கு உட்பட்ட கோடப்பமந்து அம்பேத்கர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி துணை தலைவர் பிரகாஷ் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
அம்பேத்கர் காலனியில் பல ஆண்டுகளாக 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோடப்பமந்து பகுதி அருகே உள்ள வனப்பகுதியில் தண்ணீர் ஆதாரம் உள்ளது. ஆனால், அங்கு செல்ல வழித்தடம் இல்லாததால் குடங்களில் தண்ணீர் கொண்டு வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் கட்டாரி கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எட்டின்ஸ் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் திரளான மாணவிகள் படித்து வருகின்றனர். சாலையில் வாகனங்களை நிறுத்தி பள்ளி குழந்தைகளை இறக்கி விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் வாகனங்களை நிறுத்தி பள்ளி குழந்தைகளை இறக்கி விடுவதை தவிர்க்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
மஞ்சூர் அருகே உள்ள மைனலா கிராமத்தின் ஊர்த்தலைவர் அரசு தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு கூறி உள்ளதாவது:–
மைனலா, கோத்திபென், தேனாடு, மாசிகண்டி, பெங்கால்மட்டம் ஆகிய கிராமங்களுக்கு பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணேரிமந்தணை கிராமத்தில் இருந்து குடிநீர் பெங்கால்மட்டம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, அந்த தண்ணீரை தனியார் எஸ்டேட் நிர்வாகம், தங்களது எஸ்டேட்டுக்கு பயன்படுத்த மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.
அந்த தண்ணீரை தனியார் எஸ்டேட்டுக்கு கொடுத்து விட்டால், கிராம மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காது. எனவே, தனியார் எஸ்டேட்டுக்கு தண்ணீர் வழங்க அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 128 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.