கூடலூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார்


கூடலூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 7 Aug 2017 11:30 PM GMT (Updated: 2017-08-08T00:16:16+05:30)

கூடலூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வரும் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கூடலூர்,

வங்கி கணக்கு, குடும்ப அட்டை, சிம்கார்டு என அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை முக்கியமாகி விட்டது. பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளும் ஆதார் அட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அரசு சார்பில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கூடலூர் தாலுகா மசினகுடி, தேவர்சோலை, தேவாலா, கூடலூர், நாடுகாணி, பாடந்தொரை பகுதி மக்கள் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காக கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் பின்புறம் உள்ள மையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த மையத்தில் 2 எந்திரங்கள் உள்ளது. இதில் ஒரு எந்திரத்தில் மட்டுமே ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் புகைப்படம் எடுக்க வரும் மக்களுக்கு விண்ணப்ப படிவம் பெற டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் பெறுவதற்காகவே பல்வேறு பகுதியில் இருந்து வரும் மக்கள் சில நாட்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இதனால் தங்களது வேலைகளை விட்டு ஆதார் புகைப்படம் எடுப்பதற்காக பல நாட்கள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கூடலூரில் நேற்று ஆதார் புகைப்படம் எடுக்கும் மையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் வெகுநேரம் ஆகியும் பணியாளர்கள் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்துக்கு பின் பணியாளர்கள் வந்ததும் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

காலையில் நேரத்தில் வந்தால் விரைவாக புகைப்படம் எடுத்து விடலாம் என எண்ணி வரிசையில் நின்றால் புகைப்படம் எடுக்கும் பணியாளர்கள் சரியாக வருவது இல்லை. காலதாமதமாக பணிக்கு வருகிறார்கள். அதிலும் 2 எந்திரத்திலும் வேலை செய்வது இல்லை. ஒரு எந்திரத்தை மட்டுமே பயன்படுத்தி புகைப்படம் எடுக்கப்படுகிறது. இதனால் மணிக்கணக்கில் குழந்தைகளுடன் பொதுமக்கள் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. மையத்துக்கு வரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல் புகைப்படம் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story