கோவை ரெயில் நிலையம் முன் காட்சி பொருளாக ரெயில் என்ஜின் வைத்ததை எதிர்த்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


கோவை ரெயில் நிலையம் முன் காட்சி பொருளாக ரெயில் என்ஜின் வைத்ததை எதிர்த்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

கோவை ரெயில் நிலையம் முன் காட்சி பொருளாக ரெயில் என்ஜின் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவை,

கோவை ரெயில் நிலையம் முன்பு மலை ரெயில் என்ஜினை வைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த ரெயில் என்ஜின் மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரி மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் இரவு கோவை ரெயில் நிலையம் முன் வைக்கப்பட்டது.

கோவை ரெயில் நிலையம் முன்பு 120 ஆட்டோ டிரைவர்கள் தங்கள் ஆட்டோக்களை நிறுத்தியிருந்தனர். அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சியின் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றனர்.

இந்த நிலையில் ரெயில் நிலையம் முன்பு என்ஜின் வைக்கப்பட்டதால் இடநெருக்கடி ஏற்படுவதாகவும், ஆட்டோக்களை நிறுத்த முடியவில்லை என்றும் கூறி அங்கு ஆட்டோ டிரைவர்கள் நேற்று திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியே வர முடியவில்லை. ரெயில் நிலையம் முன்பு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் ரெயில்வே அதிகாரிகளிடம் பேசி இடநெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஆட்டோ டிரைவர் களிடம் உறுதி அளித்தனர். அதை ஏற்று ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறியதாவது:–

கோவை ரெயில் நிலையம் முன் ஏற்கனவே இடநெருக்கடி இருந்து வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் ரெயில்களில் இருந்து இறங்கி வெளியே வரும் பயணிகளை ஏற்றிச் செல்ல அவர்களின் சொந்த வாகனங்கள் மற்றும் கால் டாக்சிக்களை நிறுத்த இடவசதி இல்லை. இதனால் கோவை ரெயில் நிலையம் முன்பு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.

இந்த இடநெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில் மலை ரெயில் என்ஜினை ரெயில் நிலையம் முன் வைத்து உள்ளனர். இதனால் ரெயில் பயணிகள் எளிதாக ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாது. இதே போல உள்ளே செல்வதும் சிரமமாக இருக்கும். ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு தான் ரெயில நிலையத்துக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பழமையான மலைரெயில் என்ஜினை பற்றி இளம்வயதினர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் தான். அதற்காக பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைத்திருக்க கூடாது. ரெயில் நிலையத்தின் பின்பக்கம் என்ஜினை பார்வைக்கு வைத்திருந்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. எனவே அந்த ரெயில் என்ஜினை வேறு இடத்தில் வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெயில் என்ஜினை வைப்பதற்காக மேடை அமைப்பதற்கு முன்பே அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த னர். ஆனால் அதையும் மீறி ரெயில் என்ஜினை கொண்டு வந்து அதிகாரிகள் வைத்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story