பொள்ளாச்சியில் குறை தீர்க்கும் கூட்டம்: பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் மனு
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற முடியாமல் அவதிப்படுவதாக பொள்ளாச்சியில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் சப்–கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்–அமைச்சர் விபத்து நிவாரண நிதியின் மூலம் 15 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து அவர் மனுக்களை வாங்கினார்.
அப்போது தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் முருகன் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நமது பராம்பரியமான பனை தொழிலையும், தென்னை தொழிலையும், அதை சார்ந்த தொழிலாளர்களையும் பாதிக்கும் வகையில் கருப்பட்டி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதித்து இருப்பது கிராம பொருளாதாரம் கேள்விகுறி ஆகிறது. எனவே மத்திய அரசு கருப்பட்டிக்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அங்கலகுறிச்சியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோபால்பதியில் கழிம்பு தண்ணி ஊத்து எனும் பகுதியில் பல ஆண்டுகளாக புலையன் இன பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது வனப்பகுதியில் விவசாயம் செய்து வரும் மக்களுக்கு தமிழக அரசு அனுபவ நிலப்பட்டா வழங்கி வருவதாக தெரிகிறது. எனவே எங்கள் பகுதியில் உரிய ஆய்வு செய்து அனுபவ நிலப்பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆச்சிப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கநாதன், துணை தலைவர் பழனிசாமி ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
ஆச்சிப்பட்டி ஊராட்சி அருகில் உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சியில் தனியார் ஒருவரது தோட்டத்தில் சூதாட்ட விடுதி தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த தோட்டம் அருகில் மலையப்பகவுண்டர் காலனி, ஜெய்சக்தி நகர், சூர்யா நகர், போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். எனவே சூதாட்ட விடுதி அமைந்தால் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சமூக விரோதிகள் நடமாட்டமும் அதிகரிக்கும். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சூதாட்ட விடுதி வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோட்டூர் செல்லமுத்து நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
கோட்டூர் செல்லமுத்து நகரில் விநாயகர் கோவில் அருகில் உள்ள இடத்தில் தென்னை நார் உற்பத்தி செய்யும் மில்லில் இருந்து நார் கழிவுகளை வாங்கி, அதை டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து கொட்டுகின்றனர். மேலும் தண்ணீர் கொண்டு பதப்படுத்தி வெயில் காற்றில் நன்கு உலர வைக்கின்றனர்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் மாசுபடுவதால் நீர் சிவப்பு நிறமாக மாறி நிலத்தில் இறங்குகிறது. மேலும் காற்றில் தென்னை நார் பறப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தென்னை நார் கழிவுகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழும் விண்ணப்பம் பெறப்பட்டு நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்தது. மேலும் அங்கேயே சான்றிதழ்களில் பெயர் திருத்தமும் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த சான்றிதழ்களை பெற நகராட்சி நிர்வாகம் கணினி மூலம் ஆன்–லைனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 2 மாத காலமாக எவ்விதமான பிறப்பு சான்றோ, இறப்பு சான்றோ மற்றும் திருத்த மனுக்களோ ஆன்–லைனில் பதிவு செய்யப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் சிரமப்பட்ட வருகின்றனர். மேலும் நகரில் உள்ள கட்டுமான பணி மேற்கொள்ள புது வீட்டு வரியும் கொடுப்பதில்லை. இதை தவிர புதிய குடிநீர் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் ஆகியவையும் வழங்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பிறப்பு, இறப்பு உள்ளிட்ட பணிகளை ஆன்–லைன் சேவை தொடங்கும் வரை பழைய நடைமுறையிலேயே சான்றிதழ்கள் வழங்க வேண்டும். மேலும் வீட்டு வரி உள்ளிட்ட பணிகளை விரைவில் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தென்சித்தூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:– ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்சித்தூரில் ஆண்கள் பொது கழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியில் மலம் கழித்து வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய்களில் மணல் குவிந்து கிடப்பதால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. தென்சித்தூரில் இருந்து வால்பாறை ரோடு வரை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. தென்சித்தூர் தென்றல் நகரில் 2015–2016–ம் ஆண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ரூ.4 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
ஆனால் 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. மேலும் தாய் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டு இன்னும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. எனவே மின் இணைப்பு கொடுத்து மேல்நிலை தொட்டியில் நீரை தேக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்க வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி என்பவர் சட்டையில் தேசிய கொடி குத்திக் கொண்டு வந்து பப்பாளி இலைச்சாற்றை வழங்கினார்.