கியாஸ் மானியத்தை ரத்து செய்யும் முடிவுக்கு கண்டனம், மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கியாஸ் மானியத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, மண்அடுப்பு, பானைகளை தலையில் சுமந்து வந்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை,
சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் காயத்திரி, ஷோபனா செல்வன், உமாவதி, கலாமணி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மாதந்தோறும் ரூ.4 வீதம் குறைத்து கியாஸ் மானியத்தை முழுவதும் ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும். மண்எண்ணெய் மானியத்தையும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். மக்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு மாற மத்திய பாரதீய ஜனதா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த மானியத்தை ரத்து செய்வதன் மூலம் இந்த அரசு மக்களுக்கு துரோகம் இழைக்கிறது. கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றும், அந்த பணத்தை ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
ஏராளமானவர்கள் வங்கி கணக்கு தொடங்கியும் எந்த ஏழையின் கணக்கிலும் ஒரு பைசா கூட டெபாசிட் செய்யப்பட வில்லை. மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மகளிர் காங்கிரசார் மண் அடுப்பு மற்றும் பானைகளை தலையில் சுமந்து வந்து கலந்துகொண்டனர். மேலும் கியாஸ் சிலிண்டரை பாடையில் வைத்து மாலை அணிவித்து எடுத்து வந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வீனஸ்மணி, முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், கோவை செல்வம், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, மதுசூதனன், லாலிரோடு செல்வம், குறிச்சி வசந்த், ராமநாகராஜ், அரோமா நந்தகோபால், குணசேகரன், சவுந்திரகுமார், அருள் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.