திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 132 பேர் கைது


திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 132 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2017 4:00 AM IST (Updated: 8 Aug 2017 1:52 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 132 பேர் கைது உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

திண்டிவனம்,

திண்டிவனத்தில் நடந்த விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் விவசாய சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சுப்பிரமணி மீது வழக்குபதிய உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரியை கண்டித்து நேற்று திண்டிவனம் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை விவசாய சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சிவராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் வக்கீல் கோதண்டம், சுப்பிரமணியன், முத்துக்குமரன், நெடுஞ்சேரலாதன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் காந்தி சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஒரு பெண் உள்பட 132 பேரை கைது செய்து, புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது அவர்கள் வருவாய்த்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்வரை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று கூறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.


Next Story