கொடைக்கானலில் ரூ.1½ கோடி கையாடல் செய்த கருவூல அலுவலக ஊழியர்–மனைவி கைது
கொடைக்கானல் கருவூல அலுவலகத்தில் ரூ.1½ கோடி கையாடல் செய்த ஊழியர், அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சார்நிலை கருவூல அலுவலகத்தில் உதவி கருவூல அலுவலராக பணிபுரிபவர் வெங்கடேஸ்வரன். இவர், சில மாதங்களுக்கு முன்புதான் அந்த அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதற்கிடையே, அலுவலக கணக்குகள், கோப்புகளை ஆய்வு செய்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதாவது, பெருமளவு அரசு பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மதுரை மண்டல உயர் அதிகாரிகளுக்கு இதுபற்றி அவர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில், கொடைக்கானல் சார்நிலை கருவூல அலுவலகம் வந்த உயர் அதிகாரிகள் அலுவலக கணக்குகளை தணிக்கை செய்தனர். இந்த தணிக்கையில் 1 கோடியே 53 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் அரசு பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த மெகா மோசடியில், அதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த அருண்குமார், கூடுதல் சார்நிலை கருவூல அலுவலராக பணிபுரிந்த விஜயகுமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய அரசு பணத்தை குறிப்பிட்ட 11 பேரின் வங்கி கணக்கில் வரவு வைத்து, பிறகு ஏ.டி.எம். கார்டுகள் மூலம் எடுத்து மோசடி செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த மோசடி தொடர்பாக திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் உதவி கருவூல அலுவலர் வெங்கடேஸ்வரன் புகார் செய்தார். அதன்பேரில், அருண்குமார், விஜயகுமார் மற்றும் உடந்தையாக இருந்ததாக 11 பேர் மீதும் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்தார். அவர்களை போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில், நத்தம் பகுதியில் அருண்குமார் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், அவரை சுற்றிவளைத்தனர். பிறகு, அவரை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்து பத்திரம், 28 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
சொத்து பத்திரம் அருண்குமாரின் மனைவி கனிமொழி பெயரில் இருந்தது. இதனால் இந்த வழக்கில் அவரும் சேர்க்கப்பட்டார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
இந்த மோசடி வழக்கில் அருண்குமாருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கருதுகிறோம். ஏனென்றால், கையாடல் செய்த பணம் 11 பேரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பிறகு எடுக்கப்பட்டது. அந்த 11 பேரில் 10 பேர் அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆவார்கள்.
இருந்தாலும், விஜயகுமாரிடமும் விசாரணை நடத்தினால்தான் முழுமையான விவரம் தெரியவரும். ஆனால், அவர் உடல்நலம் சரியில்லை என கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொடைக்கானல் சார் கருவூல அலுவலகத்தில் ரூ.1½ கோடி அரசு பணத்தை கையாடல் செய்த வழக்கில் சிக்கியதால், இளநிலை உதவியாளர் அருண்குமார், கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் விஜயகுமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து மாவட்ட கருவூல அலுவலர் தவசுக்கனி கூறும்போது, ‘அரசு பணத்தை கையாடல் செய்ததால் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளோம்’ என்றார்.