சேர்ந்தமரம் அருகே பீடிக்கடையை பெண்கள் முற்றுகை


சேர்ந்தமரம் அருகே பீடிக்கடையை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

சேர்ந்தமரம் அருகே பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சுரண்டை,

நெல்லை மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வேலப்பநாடாரூர் கிராமத்தில் தனியார் பீடிக்கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் 280 பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். இந்தநிலையில் பீடி சுற்றும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ¼ கிலோ பீடி இலைகளை கொடுத்து, அதனை வெட்டி பக்குவப்படுத்தி கொண்டு வருமாறு பீடிக்கடை நிர்வாகம் கூறியுள்ளது. அதற்கு கூலி வெறும் 11 ரூபாய் மட்டும் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக மாதத்துக்கு ஒருமுறை மட்டும் பீடி இலைகளை வெட்டி கொண்டு வருமாறு கூறியதாகவும், தற்போது வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு பீடி இலைகளை கொடுத்து, அதனை வெட்டி கொண்டு வர கட்டாயப்படுத்துவதாகவும், இதனை மறுக்கும் பெண்களுக்கு வேலையில்லை என பீடிக்கடை நிர்வாகம் கூறியதாகவும் தெரிகிறது.

முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த பீடி சுற்றும் பெண்கள் அப்பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயராஜ் தலைமையில் நேற்று காலை 11 மணி அளவில் பீடிக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசாரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதை அடுத்து, பீடி சுற்றும் பெண்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story