வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.21¼ லட்சம் மோசடி; ஒருவர் கைது


வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.21¼ லட்சம் மோசடி; ஒருவர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2017 11:30 PM GMT (Updated: 7 Aug 2017 9:06 PM GMT)

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ரூ.21¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா கன்னியாப்பட்டியை சேர்ந்தவர் பார்த்தீபன். இவருடைய மகன் ஜெகன்நாதன்(வயது 23). இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடி வந்தேன். கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக திருச்சி விமானநிலையம் வயர்லெஸ் ரோட்டில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.1½ லட்சம் கொடுத்தேன்.

அந்த நிறுவனத்தை நடத்தி வந்த அனஸ்அகமது மற்றும் முத்துக்குமார், குமரவேல், ஷாஜகான், ஷாகீரா, ரதிதேவி ஆகியோர் பணத்தை பெற்றுக்கொண்டு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறி விசாவும், விமான டிக்கெட்டும் வழங்கினர். பின்னர் நான் துபாய் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு சென்றேன். அப்போது அதிகாரிகள் போலி விசா, போலி டிக்கெட் வைத்திருப்பதாக கூறி என்னை விமான நிலையத்தை விட்டு வெளியே அனுப்பினர்.

இதுகுறித்து கேட்பதற்காக டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சென்றேன். அப்போது நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. என்னைப்போல 19 நபர்கள் அங்கே நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி அந்நிறுவனம் மொத்தம் ரூ.21 லட்சத்து 34 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார், விசாரிக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த அனஸ்அகமது, முத்துக்குமார் மற்றும் குமரவேல், ஷாஜகான், ஷாகீரா, ரதிதேவி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் பாதிரிப்பட்டியை சேர்ந்த முத்துக்குமாரை(37) நேற்று போலீசார் கைது செய்தனர். அந்த நிறுவனம் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதற்கான அரசின் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. முத்துக்குமாரிடம் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட போலி விசாக்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் தலைமறைவான அனஸ்அகமது உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story