தனியார் கல்லூரி பஸ் தீயில் எரிந்து நாசம் போலீசார் விசாரணை


தனியார் கல்லூரி பஸ் தீயில் எரிந்து நாசம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-08T02:37:20+05:30)

அன்னவாசல் அருகே தனியார் கல்லூரி பஸ் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலுப்பூர்,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ் ஒன்று அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து காலை நேரத்தில் கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும். பின்னர் மாலையில் அந்த பஸ் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு முக்கண்ணாமலைப்பட்டியில் இறக்கி விடுவது வழக்கம்.

அதேபோல கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாணவர்களை கல்லூரியில் இருந்து ஏற்றி வந்து முக்கண்ணாமலைப்பட்டியில் இறக்கியப்பின் எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் லெட்சுமணன் சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த கல்லூரி பஸ் திடீரென்று மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு அலுவலர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஹக்கீம் பாட்சா, அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் ஆகியோர் தீயில் எரிந்து நாசமான பஸ்சை பார்வையிட்டனர்.

மேலும் இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி நடந்தது? மர்மநபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story