டி.கே.சிவக்குமாருக்கு, குஜராத் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ராக்கி கட்டினார்


டி.கே.சிவக்குமாருக்கு, குஜராத் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ராக்கி கட்டினார்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:00 PM GMT (Updated: 7 Aug 2017 10:00 PM GMT)

சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு குஜராத் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ராக்கி கட்டினார்.

பெங்களூரு,

சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ கொண்டாட்டம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நேற்று ‘ரக்ஷா பந்தன்’ நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வடமாநிலங்களில் இந்த பண்டிகை வெகுவிமரிசையாக நடந்தது.

சகோதர பாசத்தை வெளிகாட்டும் வகையில் பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, அவர்களின் நெற்றியில் வெற்றி திலகமிட்டு பாசத்தை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் தாங்கள் சகோதரர்களாக நேசிக்கும் ஆண்களுக்கும் ராக்கி கயிறு கட்டுவார்கள். இவ்வாறு ராக்கி கயிறை கட்டி பாசம் காட்டும் பெண்களுக்கு அவர்களின் சகோதரர்கள் பரிசுகளை வழங்கி மகிழ்விப்பார்கள்.

இந்த நிலையில், பெங்களூரு அருகே ‘ஈகிள்டன்’ சொகுதி விடுதியில் தங்கியிருந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் நேற்று விமானம் மூலம் குஜராத்துக்கு சென்றனர். முன்னதாக, குஜராத் மாநில பெண் எம்.எல்.ஏ. காமினி பி.ராதோடு மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அவருடைய தம்பி டி.கே.சுரேஷ் எம்.பி. ஆகியோருக்கு ராக்கி கட்டி சகோதர பாசத்தை வெளிப்படுத்தி புறப்பட்டு சென்றார்.

இதேபோல், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர், சிறுமிகள் உள்பட அனைத்து வயது பெண்களும் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி பாசத்தை வெளிப்படுத்தி ‘ரக்ஷா பந்தனை’ கொண்டாடி பரிசுகளை பெற்றனர். ராய்ச்சூரில் அனாதை ஆசிரமத்துக்கு சென்ற கல்லூரி மாணவிகள் அங்குள்ள ஆண்களுக்கு ராக்கி கயிறு கட்டி ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடினார்கள்.

மேலும், பெலகாவி மாவட்டம் உல்யானுரு கிராமத்தில் ராக்கி கட்டிய தங்களின் சகோதரிகளுக்கு அவர்களின் சகோதரர்கள் 35 கழிவறைகளை கட்டி கொடுத்தனர். இந்த கழிவறைகள் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளின் உதவியுடன் கட்டி கொடுக்கப்பட்டது.

Next Story