புதிய மதுக்கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


புதிய மதுக்கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

குண்டலப்பட்டியில் புதிய மதுக்கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

தர்மபுரி ஒன்றியம், செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட குண்டலப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– குண்டலப்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு மதுக்கடையை தொடங்க கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மதுக்கடையை திறந்தால் எங்கள் கிராமத்தில் சட்டம், ஒழுங்கு கெடுவதோடு தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும். எங்கள் கிராமத்தில் மதுக்கடை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகள் நிறைந்த இந்த பகுதியில் மதுக்கடை திறந்தால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய மதுக்கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நல்லம்பள்ளி தாலுகா பண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த வழியாகதான் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்ல முடியும். பொதுமக்கள் நலன் கருதி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.


Next Story