பிரமிடு அமைப்பதில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஈடுபட தடை


பிரமிடு அமைப்பதில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஈடுபட தடை
x
தினத்தந்தி 7 Aug 2017 10:26 PM GMT (Updated: 7 Aug 2017 10:26 PM GMT)

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பிரமிடு அமைப்பதில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஐகோர்ட்டில் மாநில அரசு தெரிவித்தது.

மும்பை,

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 14–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நடைபெறும் ‘தஹி ஹண்டி’ எனப்படும் தயிர்ப்பானை உடைக்கும் நிகழ்ச்சியில் கோவிந்தாக்கள், பிரமிடு அமைத்து உறியடியில் ஈடுபடுவது வழக்கம்.

இதில் சிறுவர்களை ஈடுபடுத்துவதாலும், பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாக கூறி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் எம்.எஸ்.கர்னிக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘தயிர்ப்பானை உடைக்கும் நிகழ்ச்சியை மாநில அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சாகச விளையாட்டு என அறிவித்தது. ஆகையால், குழந்தை தொழிலாளர் சட்டப்படி, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், உறியடியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ என்று வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘‘இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் மாநில சட்டசபையிடம் இருப்பதால், உறியடியில் ஈடுபடுபவர்களின் வயதிலும், பிரமிடின் உயரத்திலும் ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதிக்க முடியாது’’ என்று கூறினர்.


Next Story